22.06.23 அன்று தமிழர் தரப்பு குரலாக ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் சாராம்சம்.
கனம் அவைத்தலைவர் அவர்களே!
போர் ஆரம்பித்த காலத்தில் 80 களின் ஆரம்பத்தில் இராணுவத்தை கொண்டு மக்களை கலைத்துவிட்டு, இப்போது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த நிலையில், எஞ்சியிருக்கும் சிதிலங்களில் இருந்து தமது வாழ்வை கட்டியெழுப்பும் நோக்குடன் தமது நிலங்களுக்கு வந்த மக்களுக்கு அந்த நிலத்தை மீளளிக்காது, வேறு பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு, குறிப்பாக சிங்கள மக்களுக்கு அந்த நிலத்தை பகிர்ந்தளிக்கிறது சிறிலங்கா அரசு.
– திட்டமிட்ட வகையில் தமிழர் தாய்நிலத்தின் இனப்பரம்பலை இராணுவ இயந்திரத்தின் துணையோடு செயற்கையான முறையில் மாற்றி தமிழரின் தாயக கோட்பாட்டையே சிதைக்க முயல்கிறது அரசு.
– குருந்தூர் மலை பகுதி ஒரு ஆய்வுக்குரிய புராதன தொல்லியல் நிலமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்ததே தவிர எந்த ஒரு காலத்திலும் பௌத்த தொல்லியல் நிலமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியை அளவீடு செய்யவந்த ஒரு நில அளவையாளரால், ஒரு கடிதம் மூலம் , அது குருந்தூர் விகாரைக்கான பௌத்த தொல்லியல் நிலமாக அறிவிக்கபட்டிருக்கிறது. ஒரு தொல்லியல் நிபுணரால் கூட அல்ல , ஒரு நில அளவையாரால் தான் அந்த பகுதி குருந்தூர் விகாரை எனும் பௌத்த தொல்லியல் நிலையமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் அது ஒரு பௌத்த தொல்லியல் நிலையமாக குருந்தூர் விகாரைக்கான பகுதியாக தகுதிசார் நிபுணர்களால் ஆதராபூர்வமாக அறிவித்திருந்தால் அதை நாம் எதிர்ப்பதில் முகாந்தரமும் இல்லை. அப்படி வரலாற்று ஆதாரபூர்வமாக அறிவியல் ரீதியாக அதை செய்தால் அப்படியான தொல்லியல் இடத்தை பாதுகாக்க வேண்டும் எனவே நாமும் கூறுகிறோம். ஆனால் இங்குநடப்பது தொல்லியல் குறித்து எதுவித சம்பந்தமுல் இல்லாத, வெறுமனே நிலம் அளக்க வந்த ஒரு நில அளவையாளர் ஒரு கடிதம் மூலம் அதை குருந்தூர் விகாரைக்கான பௌத்த தொல்லியல் நிலமாக பிரகடனப்படுத்துகிறார்.
அதற்கும் மேலாக, அது ஒரு தொல்லியல் நிலமாகையால் மேலதிகமாக எதுவித கட்டுமானமும் செய்யகூடாது என சிறிலங்கா நீதிமன்று அறிவித்திருக்க அதே சிறிலங்காவின் இராணுவம் தமது நாட்டின் நீதிமன்ற அறிவிப்பையே பகிரங்கமாக மீறி அங்கு ஒரு பாரிய விகாரையை கட்டி இருக்கிறது. இப்போது அதை சூழ இருக்கிற நிலங்களும் அந்த விகாரைக்கு சொந்தமானது என பௌத்த குருமார் அறிவிக்கிறார்கள். இனி அங்கு பௌத்தர்கள் மட்டுமே குடியமராலாமென எல்லவல மேதானந்த தேரர் அறிவிக்கிறார்.
இது தான் இந்த நாட்டின் யதார்த்தம். ஆரம்பத்தில் இராணுவத்தை பயன்படுத்தி மக்களை விரட்டி நிலத்தை அபகரித்து சிங்கள குடியேற்றங்களை செய்தீர்கள். இப்போது பௌத்த மதத்தையும் தொல்லியல் திணைக்களத்தையும் கருவிகளான பயப்படுத்தி சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி இனப்பரம்பலை மாற்றி தமிழர்களை நிலமற்றவர்களாக்குகிறீர்கள்.