எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் 21.07.21 அன்று தமிழர் தரப்பு குரலாக ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் சாராம்சம்.
கனம் அவைத்தலைவர் அவர்களே!
யுத்தம் என ஒன்றும் இல்லாத இந்த காலப்பகுதியில் பட்ஜெட்டின் 10.35 மூ வீதத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு இப்போது ஒதுக்கியிருக்கிறீர்கள்!
யார் உங்கள் எதிரி?
யாரை நீங்கள் எதிரியாக பார்க்கிறீர்கள்?
உலகில் எந்த ஒரு நாடும் இலங்கைக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளவோ பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவோ இல்லை!
உங்கள் நாட்டுக்குள் இருப்பவர்களையே, உங்கள் குடிமக்களையே நீங்கள் எதிரிகளாக கருதிக்கொண்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் நாட்டின் சொந்த குடிமக்களின் உரிமைகளை கூட வழங்க மறுக்கிறீர்கள்!
அவர்களும் இந்த நாட்டின் குடிமக்களாக உணர்வதை , வினைத்திறனான குடிமக்களாக. பரிணமித்து , நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதை சேர்க்கும் குடிமக்களாக உருவாவதைவிட, அவர்களின் உரிமைகளை மறுத்து அவர்கள் மீது கொடூர போரை ஏவிவிட்டு அவர்களை கொல்வதையே உங்கள் தெரிவாக எடுத்திருக்கிறீர்கள்!
உங்களது பாதுகாப்பு கொள்கை மற்றும் வெளிவிவகார கொள்கைகளானது, தமிழர்கள் எதுவித உரிமையையும் பெற்றுவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதையே அடிப்படையாக கொண்டு வரையப்பட்டு வருகிறது.
அதன் மூலம், அந்த 32 வருடங்களுக்கும் மேலான அடக்குமுறை மற்றும் போர் மூலம் நீங்கள் நினைத்த இலக்கை அடைந்து விட்டீர்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்!
ஆனால் இந்த முறை நீங்கள் முஸ்லிம்களை இலக்காக தெரிவு செய்திருக்கிறீர்கள்.
இப்போது நீங்கள் முஸ்லிம்களை தீவிரமயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
ஏனெனில் உங்களுக்கு அப்படி ஒரு எதிரி பிம்பம் ஒன்றை எதிரில் வைத்திருக்கும் தேவை ஒன்று இருக்கிறது. அப்படி ஒன்றை உருவாக்கி கொள்வதன் மூலம் தான் உங்கள் ஊழல் மிக்க மற்றும் இனவாத கொள்கைகளை முன்னெடுக்க முடியும்.
இந்த நாட்டின் மக்கள் அல்ல . நீங்கள் தான் உங்களுக்கே பொய்யை கூறி அதை நம்பும் நேர்மையீனத்தை தொடர்ந்து செய்துவருகிறீர்கள்.
இப்போது யுத்தமொன்று இல்லாத இந்த காலகட்டத்திலும் , தொடர்ந்தும் நீங்கள் இராணுவமயமாக்கலை செய்து வருகிறீர்கள் ?
ஏன்?
ஏனெனில் இப்போது உங்கள் சொந்த சிங்கள மக்களிடமிருந்து உங்களை பாதுகாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.
நாம் எதிர்த்தரப்பில் இருந்து கொண்டு காலம் காலமாக இதை சொல்லிக்கொண்டு வருகிறோம் ஆனால் அதை ஆளும் தரப்பில் இருப்பவர்கள் ஒருபோதும் செவிமடுப்பதற்கு தயாராக இருந்தது கிடையாது . ஏனெனில் எதிர்த்தரப்பில் இருக்கும் நாம் தமிழர் அல்லது முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர் ஆக இருப்பதால் ஏன் நீங்கள் எங்களுக்கு செவிமடுக்க வேண்டும் என எண்ணியிருந்திருக்கலாம்.
ஆனால் இப்போது முன்னெப்போதும் இல்லாதவாறு நிலமை மோசமாகி இருக்கிறது கடந்த 73 வருடகாலச் சரித்திரத்தில் பெரும்பாலான காலத்தை தமிழர்கள் மீதும், இப்போது முஸ்லீங்கள் மீதும் குற்றஞ்சாட்டுவதன் மூலமே கடத்தியிருக்கிறீர்கள். இனிக் குற்றஞ்சாட்டுவதற்கென உங்களுக்கு முன்னால் எந்தத்தரப்பும் இருக்கப்போவதில்லை. இம்முறை இதற்கான விலையை நீங்கள் கொடுக்கப்போகிறீர்கள்.
கடந்த 73 வருடகாலமாக தமிழர்கள் கூறிவருவதனை மக்கள் விளங்கிக்கொள்ளவும் நம்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று முஸ்லீம்கள் எதிர்நோக்கிவருவதனை மக்கள் விளங்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் தாக்கப்பட்டபோது அரசாங்கங்களை, அது எந்த அரசாங்கமாயிருந்தாலும் ஆதரித்து வந்த முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது கண்திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது மக்களுக்கு உண்மையைக்கூறப் புறப்பட்டிருக்கிறார்கள். இனவாத, ஊழல் அரசாங்கங்களுக்கு முட்டுக்கொடுத்துவந்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது மக்களுக்கு உண்மையைக்கூற தலைப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் நாம் இன்றிருக்கிறோம்.
நீங்கள் இப்பாதையிலிருந்து விலகவில்லை எனில் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். ஒரு தனிநபராக அமைச்சர் கம்மன்பிலவை குற்றஞ்சாட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை. தனித்து இந்த அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டுவதிற்கூட எவ்வித அர்த்தமுமில்லை. எழுபத்திமூன்று வருடகாலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் கொள்கைத்திட்டத்தையே கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.
இனியும் தொடர்ந்தும் நீங்கள் இந்த பாதையிலேயே செல்வீர்களேயானால் நாங்கள் சொன்னதும் செய்ததும் சரியானது என்பதனையும் நீங்கள் சொன்னதும் செய்ததும் தவறானது என்பதனையும் காலம் உங்களுக்கு உணர்த்தும்!